

உச்ச நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதன்மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் திங்கள்கிழமை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களில் ரோஹின்டன் நாரிமன் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆட்சியில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பதவியிலும் இருந்துள்ளார். பதவியேற்றுக்கொண்ட பிறகு ரோஹின்டன் நாரிமன் தலைமை நீதிபதி லோதா, நீதிபதி குரியன் ஜோசப் ஆகியோருடன் அமர்ந்து முதல் முறையாக வழக்குகளை விசாரித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31. தற்போது பொறுப்பேற்றுள்ள மூன்று நீதிபதிகளையும் சேர்த்து நீதிபதிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் நான்கு இடங்கள் காலியாக உள்ளன.
நீதிபதிகள் தேர்வுக் குழு முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் பெயரையும் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அவரது பெயரை மத்திய அரசு நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.