

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ரூ.17.60 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
மேடை அமைப்பு, பயன்படுத்தப்பட்ட இருக்கைகள் உள்ளிட்ட மரச்சாமான்கள், மற்றும் சில பொருட்களை இறக்கியதில் ஆன செலவு ரூ.17.60 லட்சம் என்று ஜனாதிபதி மாளிகைச் செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரமேஷ் வர்மா என்ற சமூக ஆர்வலர் தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்த ஜனாதிபதி மாளிகைச் செயலகம் இந்த பதிலை அளித்துள்ளது.
மேலும் நிகழ்ச்சிவாரியாக செலவுக் கணக்கைத் தாங்கள் பராமரிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் ஆன செலவை அவர் கேட்டிருந்தார், அதாவது, மோடி மற்றும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கு செலவிடப்பட்ட தொகையை அவர் கேட்டிருந்தார். ஆனால் அந்தத் தகவலை அளிக்க முடியாது என்று செயலகம் தெரிவித்துள்ளது.