

மும்பை: மகாராஷ்டிராவில் 2019-ல் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன், சிவசேனா மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். இந்த கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டு நீடித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சிவசேனா கட்சி 2-ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) கூட்டணி ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. மேலும் கட்சியின் அம்பு சின்னம், சிவசேனாவின் பெயரை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது.
முன்னதாக ஒருங்கிணைந்த சிவசேனாவின் கொறடாவாக இருந்த எம்எல்ஏ சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் கடிதம் வழங்கியிருந்தார். அதேபோல் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரே அணியின் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம் வழங்கியது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஷிண்டே உள்ளிட்டவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிமன்றம், விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று தகுதி நீக்க நடவடிக்கையை மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர் தொடங்கி உள்ளார். அதன்படி தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் கேட்டு சிவசேனாவின் இரு அணிகளை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் என மொத்தம் 54 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு அடுத்த 7 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார். இவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார், கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் இணைந்து துணை முதல்வராகியுள்ள நிலையில், 54 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.