தெலங்கானாவில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ - 6 பெட்டிகள் கருகின; அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீயணைப்பு படையினர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீயணைப்பு படையினர்.
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானாவில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பெட்டிகள் சேதம் அடைந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து தெலங்கானா மாநிலம்செகந்திராபாத் நோக்கி ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வந்துகொண்டிருந்தது. இந்த ரயில்காலை 10.30 மணியளவில் தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் பகிடிபல்லி - பொம்மைய்யபல்லி இடையே வரும்போது எஸ்-4, எஸ்-5 ஆகிய இருபெட்டிகளில் இருந்து புகை கிளம்பியது. இதனை கவனித்த பயணிகள்சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதற்குள் தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவத் தொடங்கியது. ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அவசர அவசரமாக ரயிலை விட்டு இறங்கி,தூரமாகச் சென்றனர். இந்நிலையில் தீ மளமளவென 6 பெட்டிகளில் பரவியது. ரயில்வே ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு அந்தப் பெட்டிகளை தனியாக கழற்றிவிட்டனர்.

இதற்கிடையில் தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீ விபத்தில் 5 பெட்டிகள் முற்றிலுமாக கருகின. ஒரு பெட்டி பாதியளவு சேதம் அடைந்தது.

மீதமுள்ள ரயில் பெட்டிகளுடன் ரயில் செகந்திராபாத் புறப்பட்டு சென்றது. மேலும் 5 பஸ்கள் மூலம் பயணிகள் செகந்திரபாத் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு தென் மத்தியரயில்வே அதிகாரிகள் விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பயணிகள் சிலர்கூறும்போது, “எஸ்-4 பெட்டியில்பயணி ஒருவர் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு, அதன் அருகில் நின்றுகொண்டு சிகெரட் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சார்ஜர் பிளக் வழியாக புகை வந்தது. சில வினாடிகள் பெட்டி முழுவதும் புகை பரவி, தீப்பற்றியது” என்று தெரிவித்தனர்.

இந்த தீவிபத்தால் செகந்திராபாத் - ரேபல்லி மற்றும் செகந்திராபாத் - மன்மாடு ஆகிய 2 ரயில்கள்ரத்து செய்யப்பட்டன. மேலும் 4 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மர்ம கடிதம்: கடந்த சில நாட்களுக்கு முன் செகந்திராபாத்தில் உள்ள ரயில்வே அலுவலகத்திற்கு மர்ம கடிதம் வந்தது. அதில் சமீபத்திய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து போல் டெல்லி - ஹைதராபாத் இடையே மீண்டும் ஒரு விபத்து விரைவில் நடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த தீ விபத்தில் சதிச்செயல் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in