

மூன்று முறை பாஸ்போர்ட்டை தொலைத்தவருக்கு மீண்டும் பாஸ்போர்ட் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விகாஷ் என்பவர் தனது பாஸ்போர்ட்டை மூன்று முறை தொலைத்துவிட்டார். அதன்பிறகு பெறப்பட்ட பாஸ்போர்ட்டும் சேதமடைந்துள்ளது. அதை ஒப்படைத்து மீண்டும் பாஸ்போர்ட் கேட்டபோது, அதிகாரிகள் புது பாஸ்போர்ட் வழங்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகன் அளித்த தீர்ப்பு:
மனுதாரர் மூன்று முறை பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு நான்காவது முறை சேதமடைந்த நிலையில் ஒப்படைத்துள்ளார். ‘பாஸ்போர்ட் வழிகாட்டி குறிப்பேடு 2010’ ன் படி, மூன்று முறை பாஸ்போர்ட் தொலைத்தவரின் பெயரை முன் அனுமதி பட்டியலில் வைத்துள்ளதாக மத்திய அரசு தனது பதிலில் கூறியுள்ளது.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது அவரது அடிப்படை உரிமை. அதற்கு பாஸ்போர்ட் அவசியம். மேனகா காந்தி மத்திய அரசு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் ஒரு குடிமகனின் அடிப்படை சுதந்திரத்தை மறுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய பாஸ்போர்ட் சட்டம், 1967, பிரிவு 6(2)-ன் கீழ், பாஸ்போர்ட்டை நிராகரிப்பதற்கு உரிய காரணங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. அதில் எந்த காரணமும் மனுதாரருக்கு பொருந்தவில்லை. அவர் முக்கிய ஆவணத்தை மூன்று முறை தொலைத்ததால் முன் அனுமதி பட்டியலில் வைக்கும் உரிமை அரசுக்கு உண்டு. ஆனால் அது கட்டாயமல்ல.
பாஸ்போர்ட்டை வேண்டு மென்றே தொலைத்தார் அல்லது தவறாக பயன்படுத் தினார் என்று சொல்வதற்கு எந்த சான்றும் இல்லை. பல முறை வெளிநாடுகளுக்கு அமைதியான முறையில் சென்று வந்துள்ளார். நான்காவது முறை சேதமடைந்த பாஸ்போர்ட்டை அவரே முன்வந்து தாக்கல் செய்துள்ளதில் இருந்தே அவரது நன்னடத்தை நிரூபணம் ஆகிறது. அவருக்கு புது பாஸ்போர்ட் வழங்க மறுப்பது அவரது அடிப்படை உரிமையை மீறும் செயல்.
அவருக்கு உடனே மாற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும் அல்லது புது பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இருப்பினும் பாஸ்போர்ட்டை மூன்று முறை தொலைத்ததால் அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை டெல்லி லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.