

பெங்களூரு: கர்நாடகாவில் உடுப்பி, சிக்கமகளூரு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் பொழிய வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாகியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தக்ஷின கன்னடா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
தக்ஷின கன்னட மாவட்டத்தில் இரவு பகலாக கொட்டி தீர்த்த கனமழையால் மங்களூரு, புத்தூர் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். உடுப்பியில் ரயில் தண்டவாளத்தில் மரம் சாய்ந்ததால் புதுடெல்லி- கேரளா இடையே இயக்கப்படும் நிஜாமுதீன் விரைவு ரெயில் 2 மணி நேரம் தாமதமானது.
உடுப்பியில் பெய்த மழையால் மூட நிடம்பூர் கோயில், கிருஷ்ணன் கோயில் ஆகியவற்றை வெள்ளம் சூழ்ந்தது. சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் பெய்த மழையால் துங்கபத்ரா, ஹேமாவதி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் இரவு பகலாக கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தக்ஷின கன்னடாவில் 192 மிமீ, உடுப்பியில் 311 மிமீ, சிக்கமகளூரு 105 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.