

சித்தி: முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞருக்கு ரூ.6.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில், சிகரெட் பிடிக்கும் ஒரு நபர், பழங்குடி இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக சித்தி மாவட்டம், பஹ்ரி அருகேயுள்ள குப்ரி கிராமத்தைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி - எஸ்டி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பிரவேஷ் சுக்லாவுக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதி சட்டவிரோத ஆக்கிரமிப்பு குற்றத்துக்காக பொக்லைன் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
இந்தச்சூழலில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞருக்கு ரூ.6.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சித்தி மாவட்ட ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் பாதிக்கப்பட்ட தஸ்மத் ராவத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையாகவும், ரூ.1.50 லட்சம் வீட்டை புனரமைக்கும் செலவுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நடந்தது நடந்துதான்.. முன்னதாக நேற்று போபாலில் முதல்வரை சந்தித்துவிட்டுத் திரும்பிய தஸ்மத்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளையும் கேட்டனர். அப்போது அவர், "நடந்த சம்பவத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நடந்தது நடந்தது தான். நான் முதல்வரை சந்தித்தேன். இப்போது நல்ல மாதிரியாக உணர்கிறேன். என்னிடமும் என் குடும்பத்தாரிடமும் அவர் பேசியுள்ளார்" என்று கூறியிருந்தார்.