7 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், மணிப்பூர் ஆகிய 7 மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் நேற்று முன்தினம் கூடியது.

கொலிஜியத்தின் உறுப்பினர்களான நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கன்னா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு 7 உயர் நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை பட்டியலை அனுப்பியது.

இதன்படி தற்போது மகாராஷ்டிர உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றும் திராஜ் சிங் தாக்குரை ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றும் அலோக் ஆராதேவை தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றும் ஆசிஷ் ஜே தேசாயை கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சுபாஷிஸ் தலபத்ராவுக்கு அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றும் தேவேந்திர குமார் உபாத்யாயாவை மகாராஷ்டிர உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றும் சுனிதா அகர்வாலை குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றும் சித்தார்த் மிருதுளை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசிடம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இவை தொடர்பாக கொலிஜியம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பிறகு குடியரசுத் தலைவர் அதிகாரபூர்வமாக ஆணைகளை வெளியிடுவார். இதைத் தொடர்ந்து 7 உயர் நீதிமன்றங்களில் புதிய தலைமை நீதிபதிகள் விரைவில் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in