

புதுடெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் (உள்துறை) அதன் தலைவர் பிரிஜ்லால் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரிஜ்லால் உட்பட 7 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மாநிலங்களில் உள்ள சிறைத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரயன், காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் மற்றும் பிரதிப் பட்டாச்சார்யா ஆகியோர், மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி பிரிஜ்லாலிடம் ஒரு கடிதத்தை வழங்கினர்.
ஜூலை மாதத்தில் நடைபெறும் 3 கூட்டங்களில் சிறைத் துறை சீர்திருத்தம் குறித்து விவாதிக்க இருப்பதால், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்பு இல்லை என பிரிஜ்லால் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதமும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க பிரிஜ்லாலிடம் டெரிக் ஓ பிரயன் கடிதம் வழங்கினார். அப்போதும் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை எனத் தெரிகிறது.