

புதுடெல்லி: பாஜக சித்தாந்தவாதி சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி நேற்று புகழாரம் சூட்டினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “சிறந்த தேசிய சிந்தனையாளர், கல்வியாளர் மற்றும் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளில் அவருக்கு தலைவணங்குகிறேன். வலிமையான இந்தியாவை கட்டியெழுப்ப அவர் தனது வாழ்வை அர்ப்பணித்தார். அவரது லட்சியங்களும் கொள்கைகளும் நாட்டின்ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் அரசில் அமைச்சராக பதவி வகித்தசியாமா பிரசாத் முகர்ஜி, பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தை நிறுவியவர்.
கொல்கத்தாவில் 1901-ல் பிறந்த முகர்ஜி, பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் வங்காளத்தில் அரசியல்வாதியாக முத்திரை பதித்தவர். பிரபல கல்வியாளராக திகழ்ந்தவர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்தை வாபஸ் பெற வலியுறுத்திய தொடக்க கால தலைவர். தீன தயாள் உபாத்யாயாவுடன் சேர்த்து பாஜகவின் சிந்தாந்தவாதிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
தலாய் லாமா பிறந்த நாள்: திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் 88-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “தலாய் லாமாவிடம் பேசினேன். அவரது 88-வது பிறந்த நாளில்அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தேன். அவர் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
வாரணாசி பயணம்: பிரதமர் மோடி தனது மக்களவை தொகுதியான வாரணாசியில் இன்று முதல் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இன்று மாலை வாரணாசி வரும்பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வாஜித்பூர் சென்றுஅங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அம்மாவட்டத்தில் நடைபெறும் திட்டப் பணிகளுக்கு ரூ.12,148 கோடி நிதியுதவிஅறிவிக்கிறார். இரவு பரேகாவில்தங்கும் அவர், பாஜக தொண்டர்களை சந்தித்து அவர்களுடன் உணவு எடுத்துக் கொள்கிறார்.
மறுநாள் வாரணாசியில் ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.