மத்திய அமைச்சர் தாக்கல் செய்த அவதூறு வழக்கு - ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டுக்கு சம்மன்

மத்திய அமைச்சர் தாக்கல் செய்த அவதூறு வழக்கு - ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டுக்கு சம்மன்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தாக்கல் செய்துள்ள அவதூறு புகார் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

சஞ்சீவனி கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.900 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கும் தொடர்பிருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், தனது அரசியல் வாழ்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறி மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஹர்பிரீத் சிங் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சீவனி ஊழல் தொடர்பாக ஷெகாவத் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வரும் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

அதற்கான, சம்மனை அவருக்கு அனுப்ப வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: ஒற்றுமையுடன் செயல்பட்டால் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்பது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்வோம். வெற்றிபெறும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு மிக்க தலைவர்களுக்கே இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைவர்கள் வீடு வீடாகச் சென்று மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பார்கள். வெள்ளிக்கிழமை முதல் கட்சியின் பிரச்சாரம் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேநேரம், முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே சமாதானம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து வேணுகோபால் கருத்து தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in