

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மேலும் சிவசேனா இரண்டாக உடைந்தது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து புதிய அரசு அமைத்தது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.பி.விநாயக் ராவத் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “மகாராஷ்டிர அரசில் அஜித் பவாரும் அவரது அணியை சேர்ந்த 8 பேரும் சேர்ந்த பிறகு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவரது அணியை சேர்ந்த சிவசேனா எம்எல்ஏக்கள் கிளர்ச்சியில் இறங்கியுள்ளனர்.
அமைச்சராகும் வாய்ப்பு மங்கிவிட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உத்தவ் தாக்கரேவிடம் மன்னிப்பு கோர விரும்புவதாக அவர்கள் தகவல் அனுப்பியுள்ளனர். நாங்கள் அவர்களை அணுகினால் சாதகமான பதில் அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.
அதவாலே சந்திப்பு: இந்திய குடியரசு கட்சியின் (அ) தலைவரும் மத்திய சமூகநீதித் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே நேற்று அஜித் பவாரை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் பாஜக கூட்டணிக்கு அஜித் பவார் அளித்துள்ள ஆதரவால் ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 200-க்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் அதவாலே தெரிவித்தார்.