Published : 11 Jul 2014 10:26 AM
Last Updated : 11 Jul 2014 10:26 AM

மத்திய பட்ஜெட் 2014: தமிழக தலைவர்கள் வரவேற்பும் எதிர்ப்பும்

பட்ஜெட் தொடர்பான தமிழக தலைவர்களின் கருத்துகள் வருமாறு:

விஜயகாந்த், தேமுதிக தலைவர்

தேசிய நதிநீர் இணைப்பு திட்ட ஆய்வுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதும், தமிழகத்தில் ஒரு ஜவுளிப் பூங்கா தொடங் கப்படும் என்று அறிவித்துள்ளதும் வரவேற் கத்தக்கது. கம்ப்யூட்டர், டிவி, செல்போன், சோப்பு, எண்ணெய், மற்றும் காலணிகள் ஆகியவற்றின் கலால் வரியை 6 சதவீதமாக குறைத்திருப்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு பலன் அளிக்கும். இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு ஒரு நல்ல தொடக்கமாக இது அமைந்துள்ளது.

பி.எஸ்.ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவர்

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், வருமான வரி உச்சவரம்பு ஐந்து லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தனர். ஆனால் அதை இரண்டரை லட்சமாக மட்டுமே உயர்த்தியிருப்பது அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். சுகாதாரத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு என்று கூறவில்லை. மாற்றம், வளர்ச்சி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, மக்களுக்கு ஏமாற்றத்தையும், வீழ்ச்சியையுமே தந்துள்ளது.

ராமதாஸ், பாமக நிறுவனர்

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. சிகரெட், போதைப்பாக்கு, புகையிலை மீதான வரி உயர்த்தப்பட்டிருப்பது, தீய பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வழி செய்யும். விலைவாசியையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை. வெளிநாட்டு முதலீடு அதி கரிப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்

அந்நிய மூலதனத்தை பரவலாக அனுமதிப்பதை தனது கொள்கையாக பட்ஜெட்டில் மத்திய அரசு பிரகடனம் செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகள் மேற்கொண்ட அதே அந்நிய முதலாளித்துவ கொள்கைகளை இந்த அரசும் அமல்படுத்த முனைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்க்க உருப்படியான திட்டம் இல்லை.

தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்

பெரும் எதிர்பார்ப்போடு இருந்த மக்களுக்கு இந்த பட்ஜெட் மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை. பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தித் தொழில், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு அனுமதிக் கப்படும் என்பது அதிர்ச்சி தரும் அடிப்படைக் கொள்கை மாற்றமாக உள்ளது.

அந்நிய முதலீட்டுக்கு கதவு திறந்திருப் பது பிறநாட்டு முதலாளிகளை மகிழ்விக் கும். நம் நாட்டின் பொதுத்துறை பெரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும். முதலாளி களுக்காக, முதலாளிகளால் தயாரிக்கப்பட்ட, முதலாளித்துவ பட்ஜெட்.

வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

இந்தியப் பொருளாதாரத்தைச் சரிவில் இருந்து மீட்டு உயர்த்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. வரி மட்டுமின்றி மாற்று வழிகளிலும் அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருப்பதும், அரசின் செலவினங்களை நிர்வகிக்கத் தனி ஆணையம் ஏற்படுத்தி இருப்பதும், தேவை யான நடவடிக்கைகள் ஆகும். மொத்தத்தில் இந்தியாவை வளர்ச்சிக்கான புதிய திசையில் அழைத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை கொண்ட நிதிநிலை அறிக்கை.

பாரிவேந்தர், இந்திய ஜனநாயகக் கட்சி

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தி லிருந்து மூன்று லட்சமாகவும் உயர்த்தப் பட்டிருக்கிறது. இது நடுத்தர மற்றும் அரசு ஊழியர்களிடையே வரவேற்பை பெறும்.

எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி

சாமானிய மக்களுக்கு எவ்வித சலுகையும் வழங்காமல் பெரும் பண முதலைகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்த பட்ஜெட் சலுகைகளை வழங்கியுள்ளது. வருமான வரி உச்ச வரம்பை வெறும் ரூ. 50 ஆயிரம் மட்டுமே உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x