Published : 06 Jul 2023 07:02 AM
Last Updated : 06 Jul 2023 07:02 AM
புதுடெல்லி: தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே தொடங்கப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து முடித்து தொடங்கி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த சில மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் நடைபெறும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், 2024 மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, நாடு முழுவதும் ரூ.13 லட்சம் கோடி மதிப்பிலான சுமார் 900 திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும் என உள் கட்டமைப்புத் துறை அமைச்சகங்கள் சார்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன்படி, வரும் 2024 பிப்ரவரி மாதத்துக்குள் ரூ.7.6 லட்சம் கோடி மதிப்பிலான 560 திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும் எனத் தெரிகிறது. இதுபோல, ரூ.5.6 லட்சம் கோடி மதிப்பிலான 350 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், நாளையும் நாளை மறுநாளும் பிரதமர் நரேந்திர மோடி 4 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதன்படி, 7-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் செல்லும் பிரதமர் மோடி, ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (6 வழி) உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
பின்னர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் செல்லும் பிரதமர் மோடி, கீதா பதிப்பகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையடுத்து, 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார். கோரக்பூர் ரயில் நிலையத்தின் மறுமேம்பாட்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் வாரணாசியில் தேசிய நெடுஞ்சாலை 56-ன் ஒரு பிரிவாக வாரணாசி-ஜவுன்பூர் (4 வழி) சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
வரும் 8-ம் தேதி தெலங்கானா மாநிலம் வாரங்கல் செல்லும் பிரதமர் மோடி, நாக்பூர்-விஜயவாடா நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் சென்று அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT