

இந்தி திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் நடிகரான ராஜேஷ் கன்னாவின் வீடு ‘வர்தான் ஆசிர்வாத்’ ரூ. 90 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் இதனை வாங்கியுள்ளார்.
இந்தி திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் என போற்றப்படும் ராஜேஷ் கன்னாவுக்கு மும்பையின் பாந்த்ரா பகுதியில் கடலோரமாக 6,490 சதுர அடியில் பங்களா உள்ளது.
ராஜேஷ் கன்னா 2012-ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த வீடு, ராஜேஷ் கன்னாவின் இரு மகள்களான டிவிங்கிள் கன்னா, ரிங்கி கன்னா ஆகியோருக்குச் சொந்தமானது.
இந்த வீடு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்கார்கோ லாகிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர் சஷி கிரண் ரெட்டி இதனை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், இது தொடர்பாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்த சொத்துக்கு மூன்றாம் நபர் வேறு யாரேனும் உரிமை கொண்டாடுகிறார்களா என்பதற்காக 14 நாள்கள் நோட்டீஸ் அவகாசம் அளிக்கப்படும். ஆக, 14 நாள் அவகாசத்துக்குப் பிறகே, இவ்விற்பனை இறுதி செய்யப்படும். இந்த வீடு புனரமைக்கப்படுவதாக இருந்தாலும், கடற்கரைப் பாதுகாப்பு வரம்புக்குள் வருவதால், குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கட்ட முடியாது. இருப்பினும், இந்த வீட்டில் வசிக்க சஷி கிரண் ரெட்டி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
வழக்கு
ராஜேஷ்கன்னாவின் இறுதிக் காலத்தில் அவருடன் சேர்ந்து வாழ்ந்தவரான அனிதா அத்வானி, ராஜேஷ் கன்னாவின் மறைவுக்குப் பின்னர் அவர் குடும்பத்தினர் மீது இந்த வீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அவர் கூறும்போது, “ அந்த வீடு எனக்கு வேண்டாம். அது அருங்காட்சியகமாக மாற்றப்பட வேண்டும்.
ராஜேஷ் கன்னாவுக்கு உதவி தேவைப்பட்ட நேரத்தில் அவரின் குடும்பத்தினர் எங்கு போயிருந்தனர். அந்த வீட்டில் நான் வாழ்ந்திருக்கிறேன்; அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கிறேன். நான் இழப்பீடு கோருவது கூட, அவரின் குடும்பத்தினர் என்னிடமிருந்த அனைத்தையும் பறித்துக் கொண்டதால்தான்” என்றார்.
அனிதா அத்வானியின் குற்றச்சாட்டை, ராஜேஷ் கன்னாவின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
அருங்காட்சியக கனவு...
இந்த வீட்டை 1960-ம் ஆண்டுகளில் மற்றொரு நடிகரான ராஜேந்திர குமார் என்பவரிடமிருந்து வாங்கினார். பின், 1980-ம் ஆண்டுகளில் புனரமைக்கப்பட்டது. வருமான வரி நிலுவைக்காக ஒரு முறை, வருமான வரித்துறையினரால் இந்த வீடு முடக்கப்பட்டது. பின்னர், அதனை ராஜேஷ் கன்னா மீட்டார். ஆரம்பத்தில் ஆசிர்வாத் எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த வீடு, அவரின் மறைவுக்குப் பின் ‘வர்தான் ஆசிர்வாத்’ என மாற்றப்பட்டது.
2009-ம் ஆண்டு பாம்பே டைம்ஸ் இதழுக்கு ராஜேஷ் கன்னா பேட்டியளித்தார். அப்போது தனது வீடு ஓர் அருங்காட்சியகமாக மாற்றப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். “இந்தியாவின் முதல் ‘நடிகர் அருங்காட்சியகமாக’ ஆசிர்வாத் மாற்றப்பட வேண்டும். கடவுளின் அருளால் டிவிங்கிள், ரிங்கி இருவரும் திருமணம் செய்து கொண்டு நல்ல நிலையில் உள்ளனர். அவர்களுக்கு பெரிய வீடுகள் உள்ளன. அவர்களுக்கு என் வீடு தேவையில்லை. ஆசிர்வாத், இந்தி திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டாரின் வீடு. அது அப்படியே தொடர வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், எதிர்காலத்தில் எனது மகள்களுக்கு உரிமையாகும் சொத்து என்ற அடிப்படையில் இதுதொடர்பாக அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
அந்தக் கனவு நனவாகப் போவதில்லை என்றாகியுள்ளது.