Published : 05 Jul 2023 08:59 AM
Last Updated : 05 Jul 2023 08:59 AM

மாதம்தோறும் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்குவதை தட்டிக் கேட்ட கணவர் மீது வரதட்சணை புகார் கொடுத்த பெண் ஐஏஎஸ்

பரேலி: உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பதவியில் இருப்பவர் ஜோதி மவுர்யா. ஐஏஎஸ் அதிகாரியான இவரது கணவர் அலோக் மவுர்யா, பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர். உ.பி. மாநில பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஊர்க்காவல் துறை டிஐஜி வி.கே. மவுர்யாவிடம், அலோக் மவுர்யா சமீபத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஜோதிக்கும் எனக்கும் 2010-ல் திருமணமானது. ஜோதி ஐஏஎஸ் படிக்க நான் உதவி செய்தேன். இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 16-வது இடத்திலும், பெண்கள் பிரிவில் 3-வது இடத்திலும் ஜோதி மவுர்யா தேர்ச்சி பெற்று அதிகாரியானார். 2015-ல் எங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

2019 வரை எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது. அதன் பிறகு ஜோதியின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மாதம்தோறும் சுமார் ரூ.6 லட்சம் அளவுக்கு அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். இதை அவரே தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் 2020-ல் காஜியாபாத் ஊர்க்காவல் படை மாவட்ட கமாண்டண்டுடன் நட்பு ரீதியாக ஜோதி பழகி வந்துள்ளார். இதுதொடர்பாக நான் கேள்வி கேட்டபோது உடல் ரீதியாக என்னை துன்புறுத்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் எனக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது. உடனடியாக ஜோதியிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டு அமைதியாக சென்றுவிடுமாறு என்னை சிலர் மிரட்டினர். இல்லாவிட்டால் என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதனிடையே, ஜோதி மவுர்யா தனது கணவர் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக போலீஸீல் புகார் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x