பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமாகி கைவிடப்பட்ட சிறுமிகளுக்கு உணவு, தங்குமிடம், சட்ட உதவி: புதிய திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி
Updated on
1 min read

புதுடெல்லி: பாலியல் துன்புறுத்தலால் கர்ப்பம் ஆனதன் காரணமாக குடும்பத்தால் கைவிடப்பட்ட மைனர் சிறுமிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் சட்ட உதவி வழங்கும் புதிய திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கர்ப்பம் தரிக்கும் பெண்களை உறவினர்கள் அநாதவராக கைவிட்டுவிடுகின்றனர். இதனால், சின்னஞ்சிறு பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இதனை உணர்ந்துள்ள மத்திய அரசு, அத்தகைய மைனர் பெண்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, இலவச சட்ட உதவிகளை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் நிர்பயா நிதியின் கீழ் செயல்படுத்தப்படும்.

கர்ப்பம் தரித்த மைனர் பெண்களுக்கு நிதி உதவி மற்றும் அவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்புக்கான வசதிகளை ஏற்படுத்தி தரும் இந்த திட்டத்தில் இடம்பெறுவது தொடர்பாக மாநிலங்கள், குழந்தைகள் நலஅமைப்புகள் போன்றவை தங்களது பரிந்துரைகளை அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

இந்த புதிய திட்டமானது பெண் குழந்தைகளுக்கு ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவதை உறுதி செய்யும். அதன்படி பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கும், கல்வி, காவல் உதவி, மருத்துவம், உளவியல் ஆலோசனை, சட்ட ஆதரவு, காப்பீடு உள்ளிட்ட பல சேவைகளை உடனடியாக பெறுவதற்கு இந்த புதிய திட்டம் வழிவகை செய்யும் என்று சமூக நல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

51,863 வழக்குகள்: தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2021-ம் ஆண்டில் 51,863 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 64% பெண் குழந்தைகளின் தீவிரமான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in