Published : 05 Jul 2023 11:03 AM
Last Updated : 05 Jul 2023 11:03 AM

ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பாஜக புதிய தலைவர்கள் நியமனம்

4 பாஜக மாநில புதிய தலைவர்கள்

புதுடெல்லி: 2024-ல் மக்களவைத் தேர்தலுடன், பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், மாநில பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்யும் பணியில் அக்கட்சியின் தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள தெலங்கானாவில் மாநில பாஜக தலைவரான பண்டி சஞ்சய் குமாருக்கு பதிலாக நாடாளுமன்ற எம்பியும், மத்திய அமைச்சருமான ஜி.கிஷண் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் முதல் நிதியமைச்சராக பணியாற்றிய பாஜக எம்எல்ஏ எடெலா ராஜேந்தர், எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் மாநிலத் தேர்தல் நிர்வாக குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிரிய சமிதியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், 2021-ல் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

ஆந்திர மாநில பாஜக தலைவராக தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மகள் டகுபதி புரந்தேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் தேசியம், ஒற்றுமை, சகோதரத்துவத்தை ஆதரிக்க விரும்புவதாக கூறி கடந்த ஆண்டு மே மாதத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்.பி. சுனில் குமார் ஜாகர் பஞ்சாப் மாநில பாஜகவை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பை முதல் முறையாக ஏற்றவரும், தற்போதைய ஜார்க்கண்ட் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான பாபுலால் மராண்டி அம்மாநில பாஜக தலைவராக நியமனம் செய்து தலைமை உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முன், ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக அனைத்து மாநில தலைவர்கள், மாநில பொதுச் செயலர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 7-ல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும், தேசியப் பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் தலைமை ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x