Published : 05 Jul 2023 11:15 AM
Last Updated : 05 Jul 2023 11:15 AM

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு நன்கொடையை வாரி வழங்கிய இந்திய வம்சாவளியினர்

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் தொழில்முனைவோர், மருத்துவர், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி என உலகளவில் புகழ்பெற்று விளங்குகின்றனர். அவர்கள் லாப நோக்கற்ற பல சமூக நல திட்டங்களுக்கு தேவையான நிதியை நன்கொடையாக வாரி வழங்குகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவில் உயர் கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு 1.2 பில்லியன் டாலரை (சுமார் ரூ.10,000 கோடி) 50 இந்திய வம்சாவளியினர் வழங்கியுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரிகா டாண்டன்: இந்திய அமெரிக்க தொழிலதிபரும், இசைக்கலைஞருமான சந்திரிகா டாண்டன், ஐஐஎம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவி. இவர் நியூயார்க் பல்கலை.பொறியியல் கல்வி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலரை நன்கொடையாக அளித்துள்ளனர்.

முகுந்த் பத்மநாபன்: இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான முகுந்த் பத்மநாபன், அதிநவீன பொறியியல் ஆய்வகத்திற்காக கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கு 2.5 மில்லியன் டாலரை பரிசளித்துள்ளார். இவர், ஐஐடி காரக்பூரில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் பிஎஸ் பட்டம் பெற்றவர்.

கிரண் & பல்லவி படேல்: மருத்துவர் கிரண் சி. படேல் மற்றும் அவரது மனைவி பல்லவி படேல் ஆகியோர் 2017-ம் ஆண்டில் புளோரிடா பல்கலைக்கழகத்துக்கு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 30.5 மில்லியன் டாலரை வாரி வழங்கியுள்ளனர்.

வின் (வினோத்) குப்தா: இந்திய அமெரிக்க தொழிலதிபரும், ஐஐடி-காரக்பூரின் முன்னாள் மாணவருமான வின் குப்தா, லிங்கனில் உள்ள நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் சிறு வணிக மேலாண்மைக்கான பாடத்திட்டத்தை உருவாக்க 2 மில்லியன் டாலரை நன்கொடை அளித்துள்ளார்.

லட்சுமி மிட்டல்: இங்கிலாந்தைச்சேர்ந்த உருக்கு அதிபரும், ஆர்சிலர் மிட்டலின் செயல் தலைவருமான லக்ஷ்மி என். மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் 2017-ம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 5 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கினர். மிட்டல் நிறுவனம் தெற்காசியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

குருராஜ் தேஷ்பாண்டே: இந்திய அமெரிக்க தொழிலதிபரும், துணிகர முதலீட்டாளருமான குருராஜ் தேஷ்பாண்டே, ஐஐடி-மெட்ராஸின் முன்னாள் மாணவர். தேஷ்பாண்டே அறக்கட்டளை கனடாவில் உள்ள நியூ பிரன்ஸ்விக் பல்கலைக்கழகத்திற்கு 2.5 மில்லியன் டாலரை புதுமை மற்றும் தொழில்முனைவுக்கான நன்கொடையாக பாண்ட்-தேஷ்பாண்டே மையத்தைத் தொடங்குவதற்கு வழங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x