Published : 03 Jul 2023 01:45 PM
Last Updated : 03 Jul 2023 01:45 PM

எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டம் ஒத்திவைப்பு: காவிரி பிரச்சினையில் திமுக எதிர்ப்பு காரணமா?

எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம். | கோப்புப் படம்

புதுடெல்லி: “எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அனைத்துக் கட்சிகளிடமும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். தாமதமின்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடுவதற்கு முன்பாக நிச்சயம் இந்தக் கூட்டம் நடைபெறும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி ஊழல் குற்றச்சாட்டுக்களை சமீபத்தில் முன்வைத்தார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிய அரசியல் நாடகம் அரங்கேறி இருக்கிறது. அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளின் விளையாட்டுதான் இது என்பது தெளிவாகி இருக்கிறது.

பாஜகவுக்கு எதிராக இன்னும் வலுவாக நாங்கள் போராடுவோம். இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பாதிக்காது. இது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரம். அந்தக் கட்சியின் மிகப் பெரிய தலைவர் சரத் பவார். கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை கையாளும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. ஒரு கட்சியில் இருந்து சில தலைவர்கள் வெளியேறுவதால் கட்சியின் மற்ற உறுப்பினர்கள் அவர்களோடு சென்றுவிடுவார்கள் என்று கருத முடியாது" என்று தெரிவித்தார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஏற்பாட்டின் பேரில், எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, அடுத்தக் கூட்டம் இமாச்சலப் பிரதேசத் தலைநகர் ஷிம்லாவில் ஜூலை 10-12 தேதிகளில் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், ஷிம்லாவில் தற்போதுள்ள வானிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூலை 13-14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

திமுக எதிர்ப்பு காரணமா? - காவிரி விவகாரம் காரணமாக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பெங்களூருவில் கூட்ட திமுக எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், வேறு இடத்தில் கூட்ட கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம், நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக கூடும் என கே.சி. வேணுகோபால் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20-ம் தேதி கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x