நாடாளுமன்ற கூட்டத்துக்குப் பின் அமைச்சரவை விரிவாக்கம்: பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டத்துக்குப் பின் அமைச்சரவை விரிவாக்கம்: பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
Updated on
1 min read

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்பு அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மே 26-ம் தேதி பிரதமராக பதவி ஏற்ற மோடியின் அமைச்சரவையில் 22 கேபினட் மற்றும் 22 இணை அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சரவையில் கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளுக்கு இடம் அளிக்கவில்லை என கட்சிக்குள் புகார் கூறப்பட்டு வருகிறது. தங்கள் கட்சிக்கு அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று சில கூட்டணி கட்சிகளும் அதிருப்தியடைந்திருந்தன.

எனவே, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் இருக்கலாம் என்று பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

இளம் தலைமுறையினருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா, வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங், இமாசலப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமலின் மகன் அனுராக் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் தவிர, கட்சியின் பொதுச்செயலாளர்கள் ஜே.பி.நட்டா, ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

கூட்டணிக் கட்சிகளில் உத்தரப் பிரதேசத்தின் அப்னா தளம், மகாராஷ்டி ராவின் சிவசேனை ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களுக்கு அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. அதே சமயம், தமிழகத்தைச் சேர்ந்த கூட்டணி கட்சியினருக்கு அமைச்சராகும் வாய்ப்பு இல்லை. இவ்வாறு பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in