தீஸ்தா சீதல்வாட் ஜாமீன் மனு தள்ளுபடி: உடனடியாக சரணடைய குஜராத் ஐகோர்ட் உத்தரவு

தீஸ்தா சீதல்வாட் ஜாமீன் மனு தள்ளுபடி: உடனடியாக சரணடைய குஜராத் ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக சரணடையுமாறும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை கடந்த ஆண்டு (2022) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் போலீஸார் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை எதிர்த்து சீதல்வாட் உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் காரணமாக போலீஸ் மற்றும் நீதிமன்றக் காவல் முடிந்ததுமே தீஸ்தா விடுவிக்கப்பட்டார். அண்மையில் வழக்கமான ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தார். தற்போது அந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம் அவரை உடனடியாக சரணடையுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் தீஸ்தாவின் வழக்கறிஞர் இந்த உத்தரவுக்கு 30 நாட்களுக்கு மட்டும் இடைக்கால தடைவிதிக்கக் கோரிய மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால் தீஸ்தா கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.

யார் இந்த தீஸ்தா சீதல்வாட்? - குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனித உரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான். அப்படி குஜராத்தில் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பின் சார்பில் செயல்படும் தீஸ்தா சீதல்வாட்டும் ஒருவர்.

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய தீஸ்தா சீதல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. சீதல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் சீதல்வாட், சீதா சீதல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

1993-ல் மும்பையில் மதக் கலவரம் மூண்டபோது, அவரது வாழ்க்கை தலைகீழ் மாற்றம் கண்டது. பத்திரிகையாளர் என்பதால், கலவரச் சம்பவங்களுடன் அவர் நேரடியாக உறவாட வேண்டியிருந்தது. கண்ணெதிரே நிகழ்ந்த கலவரக் காட்சிகள், அவரை உலுக்கின. அதன் பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார்.

மத அடிப்படைவாதத்துக்கு எதிரான போர் என்ற பொருள் கொண்ட ‘கம்யூனலிஸம் காம்பாட்’ என்ற மாத இதழை, கணவர் ஜாவெத் ஆனந்துடன் சேர்ந்து தொடங்கினார். ஜாவெத் ஆனந்தும் ஒரு முன்னாள் பத்திரிகையாளர்தான். தொடர்ந்து மத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அவர்களது வெறுப்புணர்வுக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தீஸ்தா செயல்பட்டு வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in