Published : 30 Jun 2023 07:43 AM
Last Updated : 30 Jun 2023 07:43 AM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், வரும் ஜூலை 3-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, 5 மாநில பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, மத்திய அமைச்சரவையிலும், கட்சியிலும் (மாநில அளவில் உட்பட) சில மாற்றங்களை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
வரும் ஜூலை மூன்றாவது வாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஜூலை 3-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கூட்ட அரங்கில் நடைபெறும் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், கிரண் ரிஜிஜு சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு புவி அறிவியல் துறை ஒதுக்கப்பட்டது.
நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சராக உள்ள அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு சட்ட அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT