தேரில் மின்சாரம் பாய்ந்து திரிபுராவில் 6 பேர் உயிரிழப்பு
உனகோட்டி: திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள குமார்காட் கிராமத்தில் ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 10 நாட்களாக தேர்த் திருவிழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தேர் நிலைக்குத் திரும்பும் விழா நடைபெற்றது.
தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது மேல்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் தேரை வடம்பிடித்து இழுத்த 6 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஜோதிஸ்மான் தாஸ்சவுத்ரி கூறும்போது, “காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுவர்" என்றார்.
இந்த அசம்பாவிதத்துக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்ததும் நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் மாநில அரசு எப்போதும் துணை நிற்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
