மத்திய அரசு தர மறுத்ததன் எதிரொலி | 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் பணம் - கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

மத்திய அரசு தர மறுத்ததன் எதிரொலி | 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் பணம் - கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக அரசின் இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசு அரிசி வழங்க‌ மறுத்ததால், 5 கிலோ அரிசிக்கு பதிலாக ரூ.170 பணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘‘தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி ஜூலை 1-ம் தேதி முதல் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்'' என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதற்காக மத்திய அரசிடம் கூடுதலாக அரிசி வழங்குமாறு இந்திய உணவு கழகத்துக்கு கடிதம் எழுதினார். இதற்கு முதலில் சம்மதம் தெரிவித்த உணவு கழகம், பின்னர் வெளிச்சந்தையில் அரிசி வழங்க முடியாது என பதிலளித்தது.

இதனால் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சித்தராமையா டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், ‘அரிசி விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்' என வலியுறுத்தினார். இருப்பினும் மத்திய அரசு கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்தது.

இதனால் சித்தராமையா தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசியை கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடனடியாக அரிசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஜூலை 1-ம் தேதி இலவச அரிசி திட்டத்தை தொடங்குவது சிக்கலானது.

இந்நிலையில், கர்நாடக உணவுத் துறை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா மற்றும் முக்கிய‌ அதிகாரிகளுடன் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அரிசிக்கு பதில் மக்களுக்கு பணம் வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலவச அரிசி வழங்கும் ‘அன்னபாக்யா' திட்டத்துக்காக அரிசி கொள்முதல் செய்ய பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டோம். மத்திய அரசின் திடீர் நடவடிக்கையால் அரிசியை பெற முடியவில்லை. இருப்பினும் நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இதற்கு மாற்று தீர்வை கையாள முடிவெடுத்திருக்கிறோம்.

அதன்படி தற்போது 5 கிலோஅரிசி இலவசமாக வழங்கப்படும். மீதமுள்ள 5 கிலோ அரிசிக்குப் பதில் ஒரு கிலோவுக்கு ரூ.34 வீதம் ரூ.170 மாதந்தோறும் வழங்கப்படும். அரிசி கொள்முதல் செய்யப்படும் வரை ரொக்கமாக பணம் வழங்கப்படும். மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக வங்கியில் இந்த பணம் வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in