பணி ஓய்வு பெறும் நாளில் 65 வழக்குகளில் தீர்ப்பளித்த பெண் நீதிபதி முக்தா குப்தா

நீதிபதி முக்தா குப்தா
நீதிபதி முக்தா குப்தா
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் முக்தா குப்தா. இவர் டெல்லி அரசு வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றி பின்னர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் அரசு வழக்கறிஞராக இருந்தபோது ஜெஸிகா லால், நைனா சாஹ்னி, நிதீஷ் கட்டாரா போன்ற பிரபல கொலை வழக்குகளில் ஆஜரானவர்.

இந்நிலையில் அவர் நேற்றுடன் (ஜூன் 27) நீதிபதியாக பணி ஓய்வுபெற்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஒரே நாளில் 65 கிரிமினல் வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

இதில் பல வழக்குகள் 2018 முதல் நிலுவையில் இருந்தவை. மேலும் சில வழக்குகளில் விசாரணை முடிந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டிருந்தன.

நீதிபதி பூனம் பம்பாவுடன் இருந்த அமர்வில் 55 வழக்குகளிலும், நீதிபதி அனீஷ் தயாளுடன் இருந்த அமர்வில் 10 வழக்குகளிலும் நீதிபதி முக்தா குப்தா தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் ஒரு வழக்கில் மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் கோடை விடுமுறையில் உள்ளது. மேலும் விடுமுறை கால அமர்வுகள் மட்டுமே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்தான் தனது ஓய்வுக்கு ஒரு நாள் முன்னதாக 65 வழக்குகளில் முக்தா குப்தா தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

2021-ல் 12 வயதான சிறுவனைக் கடத்தி, பணம் கேட்டு கொலை செய்த வழக்கில் ஜீவக் நாக்பால் என்பவருக்கு மரண தண்டனையை நீதிபதி முக்தா குப்தா வழங்கினார்.

65 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 42 வழக்குகளின் தீர்ப்பு விவரங்கள் நேற்று காலை டெல்லி உயர் நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

ஒரே நாளில் 65 கிரிமினல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ள நீதிபதி முக்தா குப்தாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in