

சோலாப்பூர்: விவசாயிகளின் வளர்ச்சி நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது மகாராஷ்டிர பயணத்தில் குறிப்பிட்டார்.
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தனது கட்சியை பாரத் ராஷ்டிர சமிதி என தேசிய கட்சியாக அறிவித்துள்ளார். பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணி நாட்டை ஆள வேண்டும் என்ற குறிக்கோளுடன் இவர் தேசிய அரசியல் களத்தில் குதித்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகர ராவ் தனது தேசிய அரசியல் பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.
ஹைதராபாத்தில் இருந்து 2 பஸ்கள் மற்றும் 600 கார்களில் தெலங்கானா அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இவர் மகாராஷ்டிரா சென்றார். சுமார் 6 கி.மீ.தொலைவுக்கு இவரது வாகனங்கள் அணிவகுத்தன. வழிநெடுகிலும் சந்திரசேகர ராவை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்து சந்திரசேகர ராவ்நேற்று காலை சோலாப்பூரின் பண்டரி சென்று அங்கு ருக்மணி சமேதபண்டரி நாதரை தரிசனம் செய்தார்.பின்னர்சர்கோலி என்ற இடத்தில்நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மகாராஷ்டிராவில் பல இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். சில இடங்களில் 7 நாட்களுக்கு ஒரு முறையும், மற்ற சில இடங்களில் 5 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். தெலங்கானாவில் பகீரதா திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். ஏரிகள் அனைத்தையும் தூர் வாரி,நீர் நிரப்பியுள்ளோம். மேலும் ஏரிகளை சுற்றிலும் பனை மரங்களை நட்டதால், சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் செழிப்பாக உள்ளன. தெலங்கானாவில் தண்ணீர் பிரச்சினையே இல்லை.
நான் செல்லும் பாதை, விவசாயிகளுக்கான பாதை. அவர்கள் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும். எனவே விவசாயிகளின் வளர்ச்சி நாட்டுக்கு அவசியம் ஆகும்.
தெலங்கானாவில் சாத்தியமானது. மகாராஷ்டிராவில் ஏன்சாத்தியமாகவில்லை? இம்மாநிலம் அதிகம் பணம் கொழிக்கும் மாநிலம். நாட்டின் பணக்காரர்கள் எல்லாம் வசிக்கும் மாநிலம். கடந்த 75 ஆண்டுகளாக மகாராஷ்டிராவை காங்கிரஸ், சிவசேனா, பாஜக என மாறி, மாறி ஆட்சி செய்துள்ளன. ஆனால், கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையவில்லை. நாட்டுஅரசியலில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். அது பிஆர்எஸ் கட்சியால் மட்டுமே சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.