

பிஹார் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த முன்னாள் முதல்வர்கள் நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில தலைவர் பஷிஸ்த் நாராயண் சிங் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா 4 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிடும். எனினும், யாருக்கு எந்தத் தொகுதி என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
முன்னாள் முதல்வர்களான நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் கூட்டாக இணைந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு ஆகிய காரணங்களால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தி நிலவுகிறது. எனவே எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று சிங் தெரிவித்தார்.
இதுபோல் பாஜக 9 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி ஒரு இடத்திலும் போட்டியிடும் எனத் தெரிகிறது.
சில எம்எல்ஏக்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாலும் சிலர் ராஜினாமா செய்ததாலும் காலியான 10 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.