Published : 27 Jun 2023 01:40 PM
Last Updated : 27 Jun 2023 01:40 PM

மத்தியப் பிரதேசம் | போபாலில் இருந்து 5 வந்தே பாரத் விரைவு ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

போபாலில் 5 வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து திறந்து வைத்தார்

போபால்: மத்தியப் பிரதேச தலைநகரில் இருந்தவாறு, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கான 5 வந்தே பாரத் விரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, இரண்டு ரயில்களை நேரடியாகவும், மூன்று ரயில்களை காணொலி வாயிலாகவும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்தியப்பிரதேச மாநில ஆளுநர் மங்குபாய் பாடீல், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில்கள்: ராணி கமலாபாதி - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கஜுராகோ - போபால் - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மட்கான்(கோவா) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஹடியா - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இதில், ராணி கமலாபாதி - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மகாகவுசல் (ஜபல்பூர்) பகுதியை மத்தியப்பிரதேசத்தின் மத்திய பகுதியுடன் (போபால்) இணைக்கும். இந்த இணைப்பின் மூலம் சுற்றுலா தலங்களான பெராகட், பச்மார்கி மற்றும் சாத்புரா பகுதிகள் பயனடையும். இந்த வழியில் பயணிக்கும் மற்ற விரைவு ரயில்களை விட இந்த வந்தே பாரத் ரயில் 30 நிமிடங்கள் முன்கூட்டியே செல்லும்.

கஜுராகோ - போபால் - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மால்வா (இந்தூர்) மற்றும் புந்தேல்கண்ட் (கஜுராகோ) பகுதிகளை மத்தியப் பிராந்தியத்துடன் (போபால்) இணைக்கிறது. இந்த எக்ஸ்பிரஸ், முக்கிய சுற்றுலாத் தலங்களான மஹா காலேஷ்வர், மண்டு, மகேஷ்வர், கஜுராகோ மற்றும் பன்னா ஆகிய நகரங்களுக்குச் செல்வதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பயனளிக்கும். இந்த ரயில் இந்த மார்கமாக பயணிக்கும் மற்ற விரைவு ரயில்களை விட 2 மணிநேரம் 30 நிமிடம் வேகமாக பயணிக்கும்.

மட்கன் (கோவா) - மும்பை வந்தே பாரத் எஸ்பிரஸ் என்பது கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். இது மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜா ரயில்நிலையத்தில் இருந்து கோவாவின் மட்கான் வரை செல்கிறது. இந்த இரண்டு இடங்களையும் இணைக்கும் மற்ற ரயில்களின் வேகத்தை விட வந்தே பாரத் ரயில் ஒரு மணிநேரத்தை மிச்சப்படுத்துவதாக இருக்கும்.

தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் கர்நாடகாவின் முக்கிய நகரங்களான தார்வாட், ஹூப்பிளி, தாவாங்க்ரே பகுதிகளை மாநிலத் தலைநகர் பெங்களூருவுடன் இணைக்கும். ஹடியா - பாட்னா வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் என்பது ஜார்கண்ட் மற்றும் பிஹாரின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும்.

முன்னதாக, திங்கள் கிழமை வெளியிட்ட ட்வீட் ஒன்றில் பிரதமர் மோடி இந்த ரயில்கள், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் இணைப்பை மேம்படுத்த உதவும் என்று தெரிவித்திருந்தார். ஒரே நேரத்தில் 5 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x