அமெரிக்கா, எகிப்து நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி | கோப்புப்படம்
பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. தலைநகர் புதுடெல்லி திரும்பிய அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக-வை சேர்ந்தவர்கள் வரவேற்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த பயணத்தின் மூலம் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முக்கியமாக வர்த்தகம் சார்ந்த முதலீடுகளும் பெறப்பட்டுள்ளன.

தொடர்ந்து இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்காவில் இருந்து எகிப்து சென்றார் பிரதமர் மோடி. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசியின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டு தலைநகர் கெய்ரோவுக்கு சென்றார். இரு நாடுகளின் வர்த்தக உறவு வலுவடையும் வகையில் இந்த பயணத்தின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி. அவருக்கு பாஜகவினர் வரவேற்பு கொடுத்தனர். “இந்த பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு கிடைத்த மரியாதையும், கவுரவமும் ஒட்டுமொத்த தேசத்துக்குமானது” என மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்தார்.

நாட்டில் என்ன நடக்கிறது என பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம் பிரதமர் மோடி கேட்டு, விவரம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in