Published : 26 Jun 2023 07:12 AM
Last Updated : 26 Jun 2023 07:12 AM
புதுடெல்லி: பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள கூட்டணிக்கு "தேசபக்தி ஜனநாயகக் கூட்டணி" என்று பெயரிட பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான இறுதி முடிவு ஷிம்லாவில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பலம் பொருந்திய பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போதே ஒன்றிணையத் தொடங்கியுள்ளன. அதற்கு அச்சாரமான முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் நிதிஷ் குமார், மம்தா, கார்கே,மு.க. ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்த கூட்டணிக்கு ‘‘பேட்ரியாட்டிக் டெமாக்ரடிக் அலையன்ஸ்- பிடிஏ" அதாவது தேசபக்தி ஜனநாயக கூட்டணி என்று பெயர் சூட்டலாமா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சிம்லாவில் அடுத்த கூட்டம்: சிம்லாவில் வரும் ஜூலை மாதம் 10-12 தேதிகளில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் அடுத்தகட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த கூட்டணிக்கான இறுதி வடிவம் கொடுக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஐ) பொதுச் செயலர் டி.ராஜா கூறுகையில், “பாஜகவை ஓரணியில் எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "பிடிஏ" என்று பெயரிடப்படலாம். எனினும், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகளை கேட்ட பிறகே ஒருமனதாக முடிவு செய்யப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT