இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் - கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் - கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
Updated on
1 min read

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக அரசு அறிவித்துள்ள இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசு அரிசி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதால், அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தேர்தலில் வென்று முதல்வரான சித்தராமையா, இந்த திட்டத்தை ஜூலை 1-ம் தேதி தொடங்குவதாக அறிவித்தார். மேலும் இந்த திட்டத்துக்கு தேவையான கூடுதல் அரிசியை வழங்குமாறு இந்திய உணவு கழகத்துக்கு கடிதம் எழுதினார். அதற்கு உணவு கழகம், அரிசி வழங்குவதாக முதலில் பதில் அளித்தது. பின்னர், வெளிச் சந்தையில் அரிசி வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த சித்தராமையா மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசியை கொள்முதல் செய்யவும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் தலைமையில் மத்திய அரசையும் இந்திய உணவு கழகத்தையும் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்வர் சித்தராமையா 21-ம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசு நிராகரிப்பு: இதையடுத்து மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை கர்நாடக உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் கே.எச்.முனியப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், “கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிராகரித்து விட்டார். இந்திய உணவு கழகத்திடம் 300 லட்சம் டன் அரிசி இருப்பு உள்ளது. இப்போதைக்கு நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 135 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு மேலும் சில திட்டங்களை செயல்படுத்த இருப்பதால் சேமிப்பில் உள்ள அரிசியை வழங்க முடியாது என பியூஷ் கோயல் தெரிவித்தார். ஆனாலும் வேறு வழியில் இந்த திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது” என்றார்.

தாமதமாக வாய்ப்பு: கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுத்துள்ளதால் திட்டமிட்டபடி இலவச அரிசி திட்டத்தை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி இந்த திட்டத்தை தொடங்காவிட்டாலும் பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் துணையுடன் இலவச அரிசி திட்டத்தை தொடங்க கர்நாடகா திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்சம் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முதல்வர் சித்தராமையா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in