அசாம் வெள்ள பாதிப்பு முதல் பாட்னா கூட்டம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 22, 2023

அசாம் வெள்ள பாதிப்பு முதல் பாட்னா கூட்டம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 22, 2023
Updated on
2 min read

செந்தில்பாலாஜி மனைவி தரப்பு வாதம்: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதான செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறையினருக்கு, காவல் துறை அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை எப்படி அனுமதி கோர முடியும்?’ என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கோரிக்கையை ஏற்று, அமலாக்கத் துறை பதில் வாதத்துக்காக, விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் வெள்ளம்: 10 மாவட்டங்களின் 1.2 லட்சம் மக்கள் பாதிப்பு: அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வள்ளலார் குறித்த ஆளுநர் கருத்து - அமைச்சர் காட்டம்: வள்ளலார் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று பேசியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. மத்திய அரசின் “தனிப்பெருங் கருணை” ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை" என்று அவர் கூறியுள்ளார்.

‘வழிபாட்டில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்: "தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அனைத்துச் சமூகத்தினரும் சாதிய பாகுபாடின்றி வழிபாடு செய்வதற்கான உரிமையைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: தென் இந்திய பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 23-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 நிபந்தனைகளுடன் கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல்: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி உள்ளது.

கட்டுமானம் தொடங்குவதற்கு முன் திட்டம் தொடங்க உள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஐஎன்எஸ் அடையாரின் ஆட்சேபனை சான்றிதழை பெற வேண்டும்; மண் அரிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்; பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனை நிர்வகிப்பதற்கான திட்ட அறிக்கை, அவசரகால வெளியேற்றத்துக்கான திட்ட அறிக்கை ஆகியவற்றை மண்டல சுற்றுச்சூழல் அலுவலகத்துக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்; நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்; நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் அல்லது வழிகாட்டுதலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்; தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது.

நிபந்தனைகள் முழுமையாக ஏற்கப்படாதது கண்டறியப்பட்டால் அனுமதி திரும்பப் பெறப்படும் உள்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பாட்னா கூட்டம்: திரிணமூல் காங்கிரஸ் நம்பிக்கை: பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான நல்ல தொடக்கமாக திரிணமூல் காங்கிரஸ் கருதுகிறது. மேலும், ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார கொள்கைகளுக்கு எதிரான, பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

‘அரிசியில் அரசியல் வேண்டாம்’ - சித்தராமையா: இந்திய உணவுக் கழகத்தில் இருந்து அரிசி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டுக் கொண்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த சித்தராமையா, அவரிடம் மத்திய அரசின் ஒத்துழைப்பை கோரினார்.

ஜூன் 24-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்து சுமார் 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், வரும் சனிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

"இந்த அழைப்பு மிகவும் தாமதமான ஒன்று. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மணிப்பூர் மக்களிடம் பேசிய பின்னர்தான் மத்திய அரசு விழித்திருக்கிறது" என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்: வெள்ளை மாளிகை கருத்து: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைப்பை மேலும் ஆழப்படுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in