Published : 22 Jun 2023 05:10 AM
Last Updated : 22 Jun 2023 05:10 AM

பதிவு திருமணங்களின்போது மணமக்களின் மத விவரங்களை கேட்கக்கூடாது - பதிவாளர்களுக்கு கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: பதிவுத் திருமணங்களின்போது மணமக்களின் மத விவரங்களை கேட்கக்கூடாது என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பதிவாளர்களுக்கும் கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள அரசின்கூடுதல் தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு கொச்சியில் பதிவுத் திருமணம் செய்ய வந்த பி.ஆர். லாலன், ஆயிஷா ஆகியோரின் மதம் தொடர்பான விவரங்களை கொச்சி மாநகராட்சி செயலர் கேட்டுள்ளார். தம்பதிகள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த விவரங்களை அவர் கேட்டுள்ளார்.

பதிவு செய்ய மறுப்பு: மதங்களைக் கூற அவர்கள் மறுக்கவே திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று மாநகராட்சி செயலர் மறுத்துவிட்டார். இதை எதிர்த்து லாலன்-ஆயிஷா தம்பதியினர் கடந்த ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், மத விவரங்களைக் கேட்காமல் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பதிவுத் திருமணம் செய்ய வருபவர்கள், திருமணம் செய்த பின்னர் திருமணத்தை முறையாக பதிவுசெய்ய பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் மணமக்களிடம் மத விவரங்களை பதிவாளர்கள் கேட்கக்கூடாது. மத விவரங்களை கூற மறுப்பதால் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது என்று பதிவாளர்கள் மறுக்கக்கூடாது.

அதேபோல் மணமக்களின் பெற்றோரின் மத விவரங்களையும் கேட்கக்கூடாது. மணமக்களின் அடையாள அட்டை, வயது தகுதி போன்ற விவரங்களை பரிசோதித்த பின்னர் அவர்களது திருமணத்தை பதிவாளர்கள் பதிவு செய்யலாம். இந்த உத்தரவை அனைத்து பதிவாளர்களும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

அதேபோல் திருமணத்தை பதிவு செய்யும் அதிகாரத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், பொது பதிவாளர், தலைமைப் பொது பதிவாளர்களும் இதைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை பின்பற்ற மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x