Last Updated : 16 Oct, 2017 03:15 PM

 

Published : 16 Oct 2017 03:15 PM
Last Updated : 16 Oct 2017 03:15 PM

முகலாய மன்னர்கள் துரோகிகள்; தாஜ்மஹால் கதை கொண்டாடப்பட வேண்டிய வரலாறா?- பாஜக எம்.எல்.ஏ.,வின் சர்ச்சைப் பேச்சு

"முகலாய மன்னர்கள் இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தவர்கள். வரலாறு என்ற பெயரில் துரோகிகளை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தாஜ்மஹாலை கட்டியவர் சொந்த மகனால் சிறையில் வைக்கப்பட்டார். இந்தக் கதையையா வரலாறு எனக் கொண்டாடுவது" என பாஜக எம்.எல்.ஏ., சங்கீத் சோம் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்குச் சென்ற சங்கீத் சோம், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, "இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்த பாபர், அக்பர், அவுரங்கஜீபை நாம் வரலாறு என்ற பெயரில் மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் துரோகிகள். அவர்களது பெயர்கள் வரலாற்றில் இருந்து நீக்கப்பட வேண்டியது.

இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாளர்கள் மஹரானா பிரதாப், சிவாஜி பற்றி பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்க வேண்டும். வரலாற்றுப் புத்தகங்களில் இந்து மன்னர்கள் பலரது சரித்திரம் இடம்பெறவே இல்லை.

தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மறக்கப்பட்ட அத்தகைய இந்து மன்னர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்ற ஆவண செய்யவேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும் மதுராவில் கிருஷ்ணர் கோயில் கட்டுவதையும் இப்போது யாராலும் தடுக்க முடியாது" என்றார்.

தாஜ்மஹால் குறித்து பேசிய அவர், "தாஜ்மஹாலை காதலின் சின்னம் எனப் போற்றுபவர்கள் அதை உ.பி., அரசு சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கியபோது வருத்தப்பட்டனர். தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹான் பின்நாளில் அவரது மகனால் சிறை வைக்கப்பட்டார். தாஜ்மஹாலைக் கட்டியவர் உத்தரப் பிரதேசத்தில் இந்துக்கள் பலரையும் குறிவைத்து தாக்கினார். இதுதான் கொண்டாடப்படவேண்டிய வரலாறா?" என்று வினவினார்.

அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லிமீன் அமைப்பு (AIMIM) தலைவர் அசாதுதின் ஓவைஸி பதில்:

பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோமின் தாஜ்மகால், முகலாயர்கள் பற்றிய பேச்சுக்கு ஏஐஎம்ஐஎம் அமைப்பின் தலைவர் ஓவைஸி பதில் அளிக்கும் போது, “தாஜ்மஹாலைக் கட்டியது துரோகிகள் என்றால் செங்கோட்டையைக் கட்டியதும்  ‘துரோகிகள்’ தான், பிரதமர் மோடி அங்கு மூவர்ணக்கொடியை ஏற்றுவதை நிறுத்தி விடுவாரா?” என்று கேட்டுள்ளார்.

மேலும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளிடத்தில் தாஜ்மகாலைப் பார்க்க வேண்டாம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பிரதமர் மோடியும் கூறுவார்களா? அயல்நாட்டு பிரமுகர்களை டெல்லியின் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் சந்திப்பதை நிறுத்துவாரா? ஏனெனில் அதுவும் ‘துரோகிகளால்’ கட்டப்பட்டதே" என்று ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்

காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஓமர் அப்துல்லா, செங்கோட்டையிலிருந்து பிரதமர் உரையைக் கேட்பதை விட நேரு ஸ்டேடியத்திலிருந்து பிரதமர் உரையாற்றினால் மக்கள் மகிழ்ச்சியடைவார்களா? என்று கேட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x