Published : 07 Oct 2017 09:35 AM
Last Updated : 07 Oct 2017 09:35 AM

ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஊடுருவ கிரிமினல் கும்பல்கள் உதவுவது அம்பலம்: வங்கதேச எல்லையில் வீரர்கள் குவிப்பு

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஊடுருவ, ஒரு சில கிரிமினல் கும்பல்கள் உதவி வரு வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவத்துக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அண்டை நாடான வங்கதேசத்துக்கு முஸ்லிம்கள் அகதிகளாக வந்தனர். இதுவரை 3 லட்சத்துக்கு மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள்ளும் சட்டவிரோதமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் வந்துள்ளனர்.

இதனால் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) மற்றும் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை (பிஜிபி) அதிகாரிகளின் 4 நாள் பேச்சுவார்த்தை நேற்று முடிவடைந்தது. அதன்பின் பிஎஸ்எப் தலைமை இயக்குநர் கே.கே.சர்மா, பிஜிபி தலைவர் மேஜர் ஜெனரல் அபுல் உசைன் ஆகியோர் கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அபுல் உசைன் கூறும்போது, ‘‘வங்கதேச மண்ணில் இருந்து கொண்டு எங்கள் நாட்டுக்கு எதிராகவோ அல்லது இந்தியாவுக்கு எதிராகவோ தீவிரவாத செயல்களில் ஈடுபட அனுமதிக்க மாட்டோம். இதை பிஎஸ்எப் அதிகாரிகளிடம் நாங்கள் உறுதியாக விளக்கி இருக்கிறோம்’’ என்றார்.

கே.கே.சர்மா கூறும்போது, ‘‘மியான்மரில் லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு வந்துள்ளனர். அங்கிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். எனவே வங்கதேசத்தில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் நுழைவதை தடுக்க எல்லையில் சோதனை சாவடிகள் அமைக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் வங்கதேசம் ஒப்புக் கொண்டுள்ளது’’ என்றார்.

இந்திய - வங்கதேச எல்லையானது 4,096 கி.மீ. தூரம் உடையது. இதில் 140 இடங்களில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக பிஎஸ்எப் கண்டறிந்துள்ளது. அந்தப் பகுதிகளில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கண்காணிப்பு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன என்று சர்மா கூறினார்.

இதற்கிடையில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் நுழைய சில கிரிமினல் கும்பல்கள் உதவி வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கிரிமினல் கும்பல்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிஎஸ்எப் தொடங்கி உள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x