

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பாஜக மூத்த தலைவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை திங்கள்கிழமை வெளியிட்டது.
உத்தரப் பிரதேச ஆளுநராக ராம் நாயக், குஜராத் ஆளுநராக ஓம் பிரகாஷ் கோலி, மேற்கு வங்க ஆளுநராக கேசரி நாத் திரிபாதி, சத்தீஸ்கர் ஆளுநராக பல்ராம்ஜி தாஸ் தாண்டன், நாகாலாந்து ஆளுநராக பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா கூடுதலாக திரிபுரா ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய நிலையில் 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாநிலங்களுக்கும் விரைவில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.