போலாவரம் அணை திட்டத்துக்கு எதிராக மக்கள் உணர்வுகளை தூண்ட வேண்டாம்: காங்கிரஸ், டி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு பாஜக வேண்டுகோள்

போலாவரம் அணை திட்டத்துக்கு எதிராக  மக்கள் உணர்வுகளை தூண்ட வேண்டாம்: காங்கிரஸ், டி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு பாஜக வேண்டுகோள்
Updated on
1 min read

போலாவரம் அணை திட்டத்துக்கு எதிராக மக்கள் உணர்வுகளை தூண்டவேண்டாம் என்று காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) ஆகிய கட்சிகளுக்கு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து இக்கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவர் கே.ஹரி பாபு கூறும்போது, “இந்த அணை திட்டம் ஆந்திர மாநிலத்துக்கு மிக முக்கியமானது. இதனால் அதிக நிலங்கள் நீர்ப்பாசனம் பெறும். தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மண்டலங்களை ஆந்திர மாநிலத்துடன் இணைக்கும் முடிவு முந்தைய காங்கிரஸ் அரசால் எடுக்கப்பட்டது. இதையொட்டியே ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா மக்களவையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

7 கிராமங்களை ஆந்திராவுடன் இணைக்கும் முடிவுக்கு தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி எதிர்ப்பு தெரிவிப்பது சரி யல்ல. இது தொடர்பான முடிவை முந்தைய காங்கிரஸ் அமைச்சரவை எடுத்தபோது, அப்போது அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி அதை எதிர்க்கவில்லை.

போலாவரம் அணை திட்டத்தால் ஆந்திரம் மட்டுமன்றி, தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களும் பலனடையும்.

இந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று டி.ஆர்.எஸ். கூறுவது நியாயமற்றது. தெலங்கானா உருவாக வழிவகுக்கும் ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு மசோதா, அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் நிறைவேற்றப்பட்டதோ, அதே சட்டப்பிரிவின்கீழ் தான் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

போலாவரம் அணை வடிவமைப்பை டி.ஆர்.எஸ். தலைவர்கள் திருத்தி அமைக்க கோருவதும் சரியல்ல. இந்த வடிவமைப்பு மத்திய நீர்வள ஆணையத்தால் செய்யப்பட்டது. இதை அரசியல் தலைவர்கள் செய்யவில்லை. ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு மசோதாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 13 திட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in