'வந்தே பாரத் ரயிலுக்கு டிக்கெட் வாங்கினேன்; பயணித்ததோ தேஜஸ் ரயிலில்' - பயணி ட்வீட்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ரயில் பயணி ஒருவர் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் வகையில் டிக்கெட் வாங்கியுள்ளார். ஆனால், அந்த ரயிலுக்கு பதிலாக வேறொரு ரயில் வந்ததாகவும். அதில் தான் பயணித்து இருந்ததாகவும் அந்த பயணி அதிர்ச்சி தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதோடு அந்த ரயிலில் கழிவறை மற்றும் மோசமான சேவையை ரயில்வே வழங்கியதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் டேக் செய்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றுள்ளது. இதனை சித்தார்த் பாண்டே எனும் பயணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மற்றொரு ட்வீட்டில், தான் பயணித்தது தேஜஸ் ரயில் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முதல்முறையாக நான் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால், வந்தே பாரத் பெயரில் வேறு ரயில் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கழிவறை அசுத்தமாகவும், ரயிலில் வழங்கப்பட்ட சேவைகள் மோசமாகவும் இருந்தது. ஆனால், வந்தே பாரத் ரயிலுக்கான கட்டணம் தான் வசூல் செய்யப்பட்டது. ரயில் எண் 22439. தேதி ஜூன் 10” என தனது ட்வீட்டில் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்ட அந்த ரயில் எண் 22439, புதுடெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி காத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று தான் இந்திய ரயில்வேயின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே சேவா ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளது. இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்: மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலாக வந்தே பாரத் விரைவு ரயில் அறியப்படுகிறது. சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாக இருப்பதால், இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in