கடந்த மூன்று நாட்களில் கடும் வெயிலில் பாதிக்கப்பட்டு உ.பி. மருத்துவமனையில் 54 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்ட மருத்துவமனையில் காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் நோயாளிகள் 400 பேர் கடந்த 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 23 பேர் கடந்த 15-ம்தேதியும், மறுநாள் 20 பேரும், நேற்றுமுன்தினம் 11 பேரும் உயிரிழந்தனர். 3 நாட்களில் மொத்தம் 54 பேர் உயிரிழந்ததாக பாலியா மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.கே.யாதவ் தெரிவித்தார்.

அசம்கர் வட்டார் கூடுதல் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் திவாரி கூறுகையில், ‘‘அதிக வெப்பம் அல்லது குளிர் நிலவும்போது, மூச்சுத் திணறல் பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்தம் அழுத்த நோயாளிகள் அதிகஆபத்தான நிலைக்கு செல்கின்றனர். வெயில் அதிகரித்தது அவர்களின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம்’’ என்றார்.

உ.பி சுகாதாரத் துறை அமைச்சர் பிரஜேஷ் பதக் கூறுகையில், ‘‘பாலியா மருத்துவமனை சம்பவத்தையடுத்து, நிலைமையை தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறேன். 2 மூத்த மருத்துவர்கள் பாலியா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். முறையான தகவல் இல்லாமல், கடும் வெயிலால் ஏற்பட்ட மரணம் குறித்து கவனக்குறைவாக கருத்து தெரிவித்த மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் திவாகர் சிங் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்கவும், தேவையான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தலைமைமருத்துவ அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது’’ என்றார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் திவாகர் சிங்,‘‘34 பேர் மாரடைப்பால் இறந்தனர்.அனைவரும் வயதானவர்கள்.ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தனர்’’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய லக்னோவைச் சேர்ந்த அரசு டாக்டர் கூறுகையில், ‘‘ ஆரம்பகட்ட விசாரணையில் வெயில் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு போல் தெரியவில்லை. அருகில்உள்ள மாவட்டத்திலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு உயிரிழப்பு இல்லை. பலர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளனர். வெயில் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால், முதலில் நெஞ்சுவலி ஏற்படாது. இந்த உயிரிழப்புகள் தண்ணீர் தொடர்புடையதாக இருக்கலாம். இது குறித்து ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in