Published : 19 Jun 2023 07:20 AM
Last Updated : 19 Jun 2023 07:20 AM
இம்பால்: மணிப்பூரில் இரு சமுதாயத்தினர் இடையிலான மோதல் முற்றுகிறது. குடியிருப்பு பகுதிகளின் பெயர் பலகைகளை பரஸ்பரம் அழித்து தங்கள் சமுதாய பெயரை சூட்டுகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இனத்தவர் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த மே 3-ம் தேதி அங்கு மோதல் ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டும், அங்கு தொடர்ந்து வன்முறை நடைபெறுகிறது.
வன்முறைக்கு இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. மைதேயி சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் பகுதியிலிருந்து குகி சமூகத்தினர் வெளியேறி உள்ளனர். இதுபோல குகி சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் பகுதியிலிருந்து மைதேயி சமூகத்தினர் வெளியேறி உள்ளனர்.
வன்முறையின்போது தலைநகர் இம்பாலில் உள்ள இவாஞ்சலிக் பப்டிஸ்ட் கன்வென்ஷன் சர்ச் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த சர்ச்சில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ‘பைதே வெங்’ (குகி காலனி) என எழுதப்பட்டிருந்தது. அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியின் நுழைவாயிலில் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பெயர் பலகை வைக்கப்பட்டது. அதில் மைதேயி இளவரசரின் குடியிருப்பு என எழுதப்பட்டிருந்தது.
குகி மற்றும் மைதேயி சமுதாயத்தினர் சம அளவில் வசிக்கும் இந்த குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் நடந்த வன்முறையின்போது, குகி சமுதாயத்தினரின் வீடுகள் அதிக அளவில் தாக்கப்பட்டன.
தலைநகரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள சூரசந்த்பூரில் குகி சமுதாயத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். அங்கிருந்த மைதேயி இனத்தவர்களின் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாயின. சூரசந்த்பூர் (மைதேயி பெயர்) என எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது லம்கா (குகி பெயர்) என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதுபோல இம்பால் நகரின் கிழக்கில் உள்ள செக்கான் பகுதியில் குகி சமுதாயத்தினரின் சொத்துகள் மீது கடந்த 2 நாட்களாக தாக்குதல் நடத்தப்பட்டன. அந்த குடியிருப்பு பகுதியின் பெயர் பலகைகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டன. இதனால் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT