தரைகட்டுப்பாட்டு மையம் மற்றும் போர்க்கப்பல் கட்டுப்பாட்டில் தபஸ் ஆளில்லா விமானம் வெற்றிகர பரிசோதனை

தபஸ் ஆளில்லா விமானம்
தபஸ் ஆளில்லா விமானம்
Updated on
1 min read

பெங்களூரு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தபஸ் ஆளில்லா விமானத்தை, தரைகட்டுப்பாட்டு மையம் மற்றும் போர்க்கப்பல் கட்டுப்பாட்டில் சுமார் மூன்றரை மணி நேரம் இயக்கி ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) சாதனை படைத்துள்ளது.

ராணுவ பயன்பாட்டுக்காக தபஸ் என்ற ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ உருவாக்கியது. இதை தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் போர்க்கப்பலின் கட்டுப்பாட்டில் பறக்கவிடும் சோதனையை டிஆர்டிஓ கடந்த 16-ம் தேதி மேற்கொண்டது.

இதற்காக கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஏரோனாடிக்கல் சோதனை மையத்தில் (ஏடிஆர்) இருந்து தபஸ் ஆளில்லா விமானம் புறப்பட்டது. இந்த இடம் கர்நாடகாவில் உள்ள கர்வார் கடற்படைத் தளத்திலிருந்து 285 கி.மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் உள்ளது. ஆளில்லா விமானத்தின் கட்டுப்பாட்டை தரைகட்டுப்பாட்டு மையத்திலிருந்து போர்க்கப்பலுக்கு மாற்றுவதற்காக, ஐஎன்எஸ் சுபத்ரா என்ற போர்க்கப்பல் கர்வார் கடற்படைதளத்திலிருந்து 148 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. சித்ரதுர்காவில் உள்ள பரிசோதனை மையத்தில் இருந்து கடந்த 16-ம்தேதி காலை 7.35 மணிக்கு புறப்பட்ட தபஸ் ஆளில்லா விமானம், 20,000 அடி உயரத்தில் சுமார் மூன்றரை மணி நேரம் பறந்தது.

இதில் 40 நிமிடங்கள் ஐஎன்எஸ்சுபத்ரா போர்க்கப்பலின் கட்டுப்பாட்டில் விமானம் பறந்தது. இதற்காக இரண்டு கப்பல் தரவு டெர்மினல்கள் போர்க்கப்பலில் பொருத்தப்பட்டிருந்தன. வானில் மூன்றரை மணி நேரம் பறந்த பின்பு சித்ரதுர்காவில் உள்ள பரிசோதனை மையத்தில் தபஸ் ஆளில்லா விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

தபஸ் ஆளில்லா விமானம், எஸ்ஏஆர் என்ற ரேடாருடன் 30 ஆயிரம் அடி உயரத்தில், 24 மணி நேரம் பறக்கும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் நடுவானில் இருந்து 250 கி.மீ தூர பகுதியை கண்காணிக்க முடியும். பாதுகாப்பு படைகளின் உளவு மற்றும் கண்காணிப்பு பணிக்காக தபஸ் ஆளில்லா விமானம் தயாரிக்கப்பட்டது. இந்த விமானம் இஸ்ரேலின் ஹெரான் ஆளில்லா விமானத்துக்கு நிகரானது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in