

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூரில் மடகசிரா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் சுபகுமார். இவர் போக்குவரத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர் 4 பேரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
அவரை இன்ஸ்பெக்டர் சுபகுமார் தடுத்து நிறுத்தினார்.
ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றாலே ரூ. 500 அல்லது ரூ. 1,000 என அபராதம் செலுத்த வேண்டி வரும். ஹெல்மெட் இல்லையென்றாலோ, போதிய வாகன ஆவணங்கள் இல்லையென்றாலோ அபராத தொகை மேலும் கூடும்.
ஆனால், சுபகுமார் அபராதம் விதிக்கவிலை, குரலை உயர்த்தி கண்டிக்கவில்லை மாறாக கையெடுத்து கும்பிட்டார். இதனைக் கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத் தலைவர், அதன் பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து போலீஸ் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டார். இனி ஒருபோதும் போக்குவரத்து விதிகளை மீற மாட்டேன் என உறுதி அளித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுபகுமார், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு தொடர்ந்து நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். ஆனாலும், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் இவ்வாறாக அத்துமீறும் நபர்களைப் பார்க்கும்போது சில நேரங்களில் விரக்தியாக இருக்கிறது. அன்றையதினமும் எனக்கு அப்படிப்பட்ட விரக்தியே ஏற்பட்டது. அந்த வேளையில் எனக்கு அவரைத் திட்ட வேண்டும் எனத் தோன்றவில்லை. எனவேதான் கைகூப்பி புத்தியுரைத்தேன். அன்று, அவருக்கு நான் அபராதம்கூட விதிக்கவில்லை. மேலும், குழந்தைகள் முன்னால் கண்டிப்புடன் நடந்து கொள்ள விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.
தலைக் கவசம் உயிர்க் கவசம் என்பது வாசித்து கடந்து செல்வதற்கான வார்த்தைகள் அல்ல வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறி என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம்.
போலீஸ்காரர் என்றாலே கறார் நபராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. சில நேரங்களில் அன்பால்கூட தவறுகளைத் திருத்த முடியும் என நிரூபித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் சுபகுமார்.