

டெல்லி பல்கலைக்கழகத்தை அடுத்து மற்ற மாநிலங்களில் உள்ள 4 ஆண்டு பட்டப்படிப்புகள் மீதும் பார்வை செலுத்தத் தொடங்கி விட்டது மத்திய பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி).
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 57 கல்லூரிகளில் தொடங்கப்பட்ட 4 ஆண்டு பட்டப்படிப்புகளை இந்த கல்வியண்டில் ரத்து செய்து யூஜிசி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, சில தனியார் பல்கலைக்கழகங்களில் இருக்கும் 4 வருட பட்டப்படிப்புகளையும் ரத்து செய்து உத்தரவிட யூஜிசி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தி இந்துவிடம் யூஜிசி அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கையில், ‘நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் மற்றும் குர்காவ்னில் வளர்ந்து வரும் அசோகா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 4 வருட பட்டப்படிப்புகள் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப யோசித்து வருகிறோம்.’ எனத் தெரிவித்தனர்.
ஆனால், உ.பி. மாநில அரசின் அம்பேத்கர் பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரூவில் உள்ள மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆகியவற்றிலும் 4 ஆண்டு படிப்பு உள்ளதாகவும், அதில் சட்டம் மற்றும் தொழில் பட்டப்படிப்புகளுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.
ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தில் பி.ஏ.வில் தொடங் கப்பட்ட சமூகவியல், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய 4 வருட பட்டபடிப்புகள், 2018-ல் முடிவடைகின்றன. இந்த வருடம் தொடங்க உள்ள அசோகா பல்கலைக்கழகம், 4 வருட பட்டப்படிப்பிற்கான அறிவிப்பு கொடுத்திருக்கிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் கடும் சர்ச்சைகளுக்கு இடையே முதன்முறையாக தொடங்கப்பட்ட 4 வருட பட்டப்படிப்பு கடந்த மாதம் யூஜிசி ரத்து செய்து உத்தரவிட்டது பெரும் சர்ச்சைக் குள்ளானது. இதை எதிர்த்தும், ஆதரித்தும் பெரும் போராட்டங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.