Published : 04 Jul 2014 04:37 PM
Last Updated : 04 Jul 2014 04:37 PM

மண்ணெண்ணெய் விலை ரூ.4, காஸ் சிலிண்டருக்கு ரூ.250 அதிகரிக்க பரிசீலனை?

மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.4-ம், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.250-ம் அதிகரிக்க வகை செய்யும் கிரித் பாரிக் கமிட்டியின் பரிந்துரையை, அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவுக்கு பெட்ரோலியத் துறை அமைச்சகம் அனுப்ப முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்ய, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கிரித் பாரிக் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு டீசல், காஸ் மற்றும் மண்ணெண்ணை விலையை உடனடியாக உயர்த்தக் கோரி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் பரிந்துரை செய்தது. ரூ.72,000 கோடி மானியமாக வழங்கப்படுவதைத் தடுக்க, இந்த விலை அதிகரிப்பு அவசியம் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியது.

டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 அதிகரிக்கவும், மண்ணெண்ணை விலையை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்கவும், காஸ் சிலிண்டர் விலையை ரூ. 250 உயர்த்தவும் பாரிக் குழு பரிந்துரைத்தது. மேலும், தற்போது மானிய விலையில் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் என வழங்கப்படுவதை 6-ஆக குறைக்க வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியது.

டெல்லி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், கிரித் பாரிக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், கிரிக் பாரிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையின், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு தொடர்பாக வரைவு ஒன்றை தயார் செய்து, அதனை அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பிவைப்பது என பெட்ரோலியத் துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேவேளையில், டீசல் விலையை மாதம் தோறும் 40-ல் இருந்து 50 பைசா வரை அதிகரித்துக்கொள்ள வகை செய்யும், முந்தைய அரசின் நடவடிக்கையை அப்படியே பின்பற்றுவது என பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x