ஜூன் 25 இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் 'எமர்ஜென்ஸி'-யை விமர்சித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: "நாம் ஜூன் மாதம் 25ஆம் தேதியையும் மறந்து விடக்கூடாது. இந்த நாளன்று தான் நமது தேசத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இது இந்திய நாட்டு வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 102-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று பேசுகையில், "இந்தியா மக்களாட்சியின் தாய். நாம் நமது மக்களாட்சி முறையின் ஆதர்சங்களை தலையானதாகக் கருதுகிறோம், நமது அரசமைப்புச் சட்டத்தை தலையாயது என்று கருதுகிறோம் என்பதால்,

நாம் ஜூன் மாதம் 25ஆம் தேதியையும் மறந்து விடக்கூடாது. இந்த நாளன்று தான் நமது தேசத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இது இந்திய நாட்டு வரலாற்றிலேயே ஒரு கருப்பு அத்தியாயம். லட்சக்கணக்கானோர் இந்த அவசரநிலையைத் தங்கள் முழுச்சக்தியோடு எதிர்த்தார்கள். மக்களாட்சியின் ஆதரவாளர்களின் மீது இந்தக் காலகட்டத்தில் எந்த அளவுக்குக் கொடுமைகளும், அநீதிகளும், சித்திரவதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன, எத்தனை துன்பங்களுக்கு அவர்கள் ஆளானார்கள் என்பதை நினைக்கும் போது இன்றும் கூட மனம் கொந்தளிக்கிறது.

இந்தக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மீது பல புத்தகங்கள் எழுதப்பட்டுவிட்டன. சங்கர்ஷ் மேன் குஜராத், அதாவது போராட்டத்தில் குஜராத் என்ற புத்தகத்தை எழுதக்கூடிய வாய்ப்பு அந்தக் காலத்தில் கிடைத்தது.

சில நாட்கள் முன்னர் தான் அவசர நிலை மீது எழுதப்பட்ட மேலும் ஒரு புத்தகம் என் பார்வையில் பட்டது. இதன் தலைப்பு, Torture of Political Prisoners in India, அதாவது இந்தியாவில் அரசியல் கைதிகளின் சித்திரவதை. அவசரநிலையின் போது வெளிவந்த இந்தப் புத்தகத்திலே, எப்படி, அந்தக் காலத்தைய அரசு, ஜனநாயகக் காப்பாளர்களிடத்திலே எத்தனை கொடூரமாக நடந்து கொண்டது என்பது விபரமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகத்திலே ஏராளமான விசயங்களின் ஆய்வுகளும், நிறைய படங்களும் இருக்கின்றன. இன்று நாம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், தேசத்தின் சுதந்திரத்தையே ஆபத்துக்குள்ளாக்கிய இத்தகைய குற்றங்கள் குறித்து ஒரு மீள்பார்வை பார்க்க வேண்டும்.

இதன் மூலம், இன்றைய இளைய தலைமுறையினரால் ஜனநாயகத்தின் மகத்துவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in