அமெரிக்கா, கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தாக்குதல் என்ஐஏ விசாரணை

அமெரிக்கா, கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தாக்குதல் என்ஐஏ விசாரணை
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் மீதான தாக்குதல் வழக்கை டெல்லி போலீஸார் என்ஐஏ வசம் ஒப்படைத்துள்ளனர்.

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே கடந்த மார்ச் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்த இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுபோல அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த மார்ச் 20-ம் தேதி தாக்குதல் நடத்தினர். மேலும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே சமீபத்தில் போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சாந்துவுக்கு மிரட்டல் விடுத்தனர். குறிப்பாக கடந்த 1994-ம் ஆண்டு முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்குக்கு ஏற்பட்ட நிலை ஏற்படும் எனமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக தாக்குதல் அல்லது மிரட்டல் விடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது” என கூறப்பட்டிருந்தது.

இதனிடையே கனடா மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் மார்ச்மாதம் நடந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினர், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சூழ்நிலையில், காலிஸ்தான் அமைப்பினருக்கு எதிரான இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றி டெல்லி காவல் துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in