Published : 17 Jun 2023 01:43 PM
Last Updated : 17 Jun 2023 01:43 PM

எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதற்கான நடவடிக்கைகளை நமது விமானப்படை எடுத்து வருகிறது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

ஹைதராபாத்: ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எப்போதும் தயாராக இருக்க இந்திய விமானப்படை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகலில் உள்ள இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விமானப்படையின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "1948, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் பகை நாடுகளுடன் ஏற்பட்ட போர்களில் நாட்டை காக்க இந்திய விமானப்படையின் துணிச்சல் மிக்க வீரர்கள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். அது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. கார்கில் போரின்போதும், பாலகோட்டில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை அழித்தபோதும் அதே உறுதியையும் திறனையும் வெளிப்படுத்தியது இந்திய விமானப்படை.

மனிதாபிமான உதவிகளையும் பேரிடர் நிவாரணப் பணிகளையும் இந்திய விமானப்படை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளையும் மீட்பு மற்றம் நிவாரண உதவிகளையும் மோசமான வானிலைக்கு மத்தியில் நமது இந்திய விமானப் படை வழங்கியது. அதற்கும் முன், ஆப்கனிஸ்தானின் காபூலில் சிக்கித் தவித்த 600க்கும் மேற்பட்ட இந்தியர்களையும் பிற வெளிநாட்டினரையும் பத்திரமாக மீட்டது நமது விமானப் படை. சாதகமற்ற சூழலில் பறப்பது, தரையிறங்குவது ஆகியவை நமது விமானப்படையின் உயர் திறன்களுக்கு சான்றாக விளங்குகிறது.

எதிர்கால போர்க்களத்தில் உயர் தொழில்நுட்பப் போரை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள் உட்பட ஒட்டுமொத்த பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நமது விமானப்படை எப்போதும் தயாராக இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷெல் வி.ஆர். சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x