Published : 15 Jun 2023 07:51 AM
Last Updated : 15 Jun 2023 07:51 AM

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது மே. வங்கத்தில் பல இடங்களில் வன்முறை, வெடிகுண்டு வீச்சு

கோப்புப்படம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது வன்முறைகள் நடந்தன. பல இடங்களில் வெடிகுண்டு வீசிய சம்பவங்கள் நடந்தன.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலையொட்டி திரிணமூல் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தெற்கு 24 பர்கானாஸ், பங்குரா மாவட்டங்களில் வேட்புமனு தாக்கலின்போது வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பங்கோரி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களும், ஐஎஸ்எஃப் (இந்திய மதச் சார்பற்ற முன்னணி) கட்சியினரும் மோதிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று 5-வது நாளாக அங்கு இரு கட்சியினரும் மோதிக் கொண்டனர். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் அவர்கள் சூறையாடினர்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை, டிக்கெட் கிடைக்காத கட்சி நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்ததால் இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

மேலும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல், பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த விரைவு அதிரடிப் படை உள்ளிட்ட போலீஸார் மீது வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் போலீஸார் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் பங்குரா மாவட்டம் இந்தாஸ் பகுதியில் பாஜக தொண்டர்களும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களும் மோதிக் கொண்டனர். இரு பிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு கடந்த 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று முதலே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கட்சியினர் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதுகுறித்து பாங்கோர் தொகுதி எம்எல்ஏவும், ஐஎஸ்எஃப் கட்சி எம்எல்ஏவுமான நவுஷாத் சித்திக் கூறியதாவது: வேட்புமனு தாக்கலின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் நேற்று இரவு முதல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எங்கள் கட்சிக்காரர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

திரிணமூல் மறுப்பு: இதுகுறித்து மாநில திரிணமூல் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறும்போது, “எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதே ஐஎஸ்எஃப் கட்சியினர்தான்" என்றார்.

இந்த 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 5.67 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். சுமார் 74 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x