

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று ஒரே நாளில் தெலங்கானா மாநில ஆளும் கட்சியினருக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
ஹைதராபாத்தில் நேற்று ஒரே சமயத்தில் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இவர்கள், 30 குழுக்களாக பிரிந்து, ஆளும்கட்சியின் மேதக் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகர் ரெட்டி, நாகர் கர்னூல் எம்எல்ஏ ஜனார்த்தன் ரெட்டி, புவனகிரி தொகுதி எம்எல்ஏ சேகர் ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகம், உறவினர், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று காலை 7 மணி முதல் இரவு வரை தொடர்ந்து சோதனை நடத்தினர்.
மேலும், ஆளும்கட்சியை சேர்ந்த ரியல்எஸ்டேட் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், வருமான வரி செலுத்தாதவர்களின் பல்வேறு அசையா சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதால் தெலங்கானா ஆளும் கட்சியினர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது என்று அமைச்சர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.